உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய், தேர்தல் நிதி பத்திரம், புல்டோசரை கொண்டு வீடுகள் இடிப்பு,  பட்டியல் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கடந்த மே மாதம்  தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறார்.

Advertisment

அதன்படி, இன்று சனாதனத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் கருத்துகளை தடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. அப்போது அமர்வு மேடையை நோக்கி வந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் "சனாதனத்தை இழிவு செய்வதை இந்தியா(ஹிந்துஸ்தான்) சகித்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி காலணியை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயன்றார். இதை கண்டு நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், சரியான நேரத்தில் வழக்கறிஞரை தடுத்து நிறுத்தி அவரை வெளியே அழைத்துச் சென்றனர். அப்போதும் அதே கோஷத்தை தொடர்ந்து முழங்கியபடி சென்றுள்ளார்.

Advertisment

ஆனால், இதை எல்லாம் அமைதியாகப் பார்த்துகொண்டிருந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எந்தத் தயக்கமும் இல்லாமல், “இதற்கெல்லாம் கவனத்தை திருப்ப வேண்டாம், நாங்கள் திசைதிருப்பப்படப் போவதில்லை. இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது” என்றார். அத்துடன் வழக்கு விசாரணையையும் இடை நிறுத்தாமல் தொடர்ந்து வாதிட சொல்லி அமவர்வை நடத்தி முடித்தார். 

அண்மையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்து தள்ளுபடி செய்தது. அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்ய சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் தீவிரமான பக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

ஆனால், தலைமை நீதிபதியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. விஷ்ணு கோயில் சீரமைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு, "நான் சொன்ன கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வேறுமாதிரி சித்தரிக்கப்படுவதாக ஒருவர் என்னிடம் கூறினார். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். கோயில் மேற்பார்வை தொல்பொருள் ஆய்வுதுறையின் கீழ் வருவதால், இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது” என்று பி.ஆர். கவாய் விளக்கமளித்திருந்தார்.

இந்த சூழலில் தான் விஷ்ணு சிலை புதுப்பிப்பு வழக்கில் தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் சமூக செயர்பாட்டாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தலைமை நீதிபதியின் கண்ணியமான பதில் நீதிமன்ற அறையில் இருந்தவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றாலும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.