நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் வழக்கறிஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையான சொற்களைக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்ப குமாரி, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிராகவும், மின்சார வாரியத்தால் ரூ.1.30 லட்சத்திற்கும் அதிகமான தொகை கோரப்பட்டதற்கும் எதிராகவும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி ராஜேஷ் குமார் அமர்வு முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மகேஷ் திவாரி ஆஜரானார். அப்போது, வரவிருக்கும் தீபாவளியைக் கருத்தில் கொண்டு மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 முதல் ரூ.15,000 மட்டுமே டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று மகேஷ் திவாரி வாதிட்டார்.
அப்போது நீதிபதி, ‘இல்லை. அவ்வளவு குறைவான தொகை அல்ல. நான் சட்டத்தின்படி செல்ல வேண்டும். சட்டத்தின்படி நீதி செய்யப்பட வேண்டும். நான் நீதிமன்றம் அல்ல. மாற்று தீர்வு மற்றும் பல விஷயங்கள் உள்ளன. பொருத்தமான தொகையை டெபாசிட் செய்தால் மட்டுமே நான் மன்னிப்பு வழங்க முடியும்’ என்று கூறினார். இதனையடுத்து, மாதந்திர பில் ரூ.200க்கும் குறைவாக இருப்பதால் அதிகபட்சமாக ரூ.15,000 செலுத்த வேண்டிருக்கும். ஆனால், வாரியம் ஒரு நாளைக்கு ரூ.350 முதல் ரூ.450 கோருகிறது’ என வாதிட்டார். அதனை தொடர்ந்து, ‘மிஸ்டர் திவாரி, நான் இங்கே காலியான மண்டையோடு அமர்ந்திருக்கவில்லை. என் மண்டையில் ஏதோ இருக்கிறது. என்ன மாதிரியான வாதம் நடக்கிறது” என்று கூறியதையடுத்து, இருவருக்கும் வாதங்கள் தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில், ‘ஒரு வழக்கறிஞர் இப்படியா வாதிடுவது’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கோபமடைந்த வழக்கறிஞர் மகேஷ் திவாரி, “நீங்கள் சொல்லும் விதத்தில் என்னால் வாதிட முடியாது, என் சொந்த வழியில் தான் நான் வாதிட முடியும். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.. எந்த வழக்கறிஞரையும் அவமானப்படுத்த முயற்சிக்காதீர்கள். சார், தயவுசெய்து யாரையும் அவமானப்படுத்த முயற்சிக்காதீர்கள். நாடு எரிகிறது, நீதித்துறையால் நாடு எரிகிறது. இது தான் எனது வார்த்தைகள், எந்த வழக்கறிஞரையும் அவமானப்படுத்த முயற்சிக்காதீர்கள். நான் என் சொந்த வழியில் வாதிடுவேன். வரம்பு மீறாதே, தயவு செய்து வரம்பு மீறாதே. நான் ஏற்கெனவே 40 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன்” என்று கூறி நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தர்லோக் சிங் சவுகான் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மகேஷ் திவாரிக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சனாதனத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் கருத்துகளை தடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. அப்போது அமர்வு மேடையை நோக்கி வந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் “சனாதனத்தை இழிவு செய்வதை இந்தியா(ஹிந்துஸ்தான்) சகித்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி காலணியை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயன்றார். உச்ச நீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.