சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 01.07.2025 அன்று நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது.  இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் அஜித்குமாரை சுற்றி நின்று தாக்குவதை கோவிலின் கழிவறையிலிருந்து இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சி இந்த வழக்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது. மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர் நேற்று வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கி உள்ளார்.

வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் என்பவர் தமிழக டிஜிபிக்கு இமெயில் மூலம் கடிதம் கொடுத்துள்ளார். அதில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா பல ரவுடிகளுடன் தொடர்புடையவர். கடந்த 28ஆம் தேதி ராஜா தன்னை மிரட்டியுள்ளார். எனவே எனக்கும் என் குடும்பத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் அஜித்குமார் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த லாக்கப் மரணத்தைக் கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 200 - க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்பு புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த அஜித்குமாருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையை வலியுறுத்தியும், காவல் துறையைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.