தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “சமீபகாலமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான வன்முறை மற்றும் கொடூரச் சம்பவங்களால் மிகவும் மோசமடைந்து வரும் சட்டம் - ஒழுங்கு நிலைமையை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். கோயம்புத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சூரஜ் (22 வயது) என்பவர், ஆட்டோ ரிக்‌ஷா தொடர்பான தகராறில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாஜித் கான் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரால் 2025 டிசம்பர் 28 அன்று தாக்கப்பட்டார். 

Advertisment

படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி 2025 டிசம்பர் 30 அன்று உயிரிழந்தார். மேலும், 2025 டிசம்பர் 29 அன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இரயில் நிலையத்தில், ரீல்ஸ் (reels) எடுப்பதைத் தடுத்ததற்காக, கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களால் மற்றொரு புலம் பெயர் தொழிலாளி கொடூரமாகத் தாக்கப்பட்டார். 2025 டிசம்பர் 30 அன்று அதே இரயில் நிலையத்தில், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்கள் ஒரு பயணியை மிகக் கொடூரமாகத் தாக்கிய மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Advertisment

இந்தச் சம்பவங்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையும், இளைஞர்களிடையே பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தையும், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இயந்திரத்தின் தோல்வியையும் தெளிவாகக் காட்டுகின்றன. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தெரிவிக்கும் இன ரீதியான கருத்துக்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை உருவாக்கியுள்ளன. இதுமட்டுமின்றி, கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் மற்றும் கல்வி நிறுவனங்களின் போர்வையில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுபவர்களின் கைது போன்ற நிகழ்வுகள், மாநிலத்தின் உட்புறப் பாதுகாப்பு சவால்களைப் பறைசாற்றுகின்றன. 

nainar-letter

அடிக்கடி நிகழும் கொள்ளைச் சம்பவங்கள், முதியவர்கள் கொலை, பட்டப்பகலில் அரங்கேறும் கொலைகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் நிலைமையின் தீவிரத்தை மேலும் உணர்த்துகின்றன.
மேற்கூறிய நிகழ்வுகள் மற்றும் சீர்குலைந்து வரும் சட்டம் - ஒழுங்கு சூழலால், பொதுமக்களும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நலிவடைந்த பிரிவினரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் தாங்கள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment