தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகம் சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் விஷ்ணு (20). மல்லிபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து முடித்துவிட்டு மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படித்து வருகிறார். தற்போது தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த விஷ்ணு நேற்று வியாழக்கிழமை இரவு மீண்டும் கல்லூரிக்கு புறப்பட்ட போது அவரது அண்ணன் கார்த்திக் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு இளைஞர் இறந்து கிடப்பதாக தகவல் பரவிய நிலையில் பொதுமக்களும் சேதுபாவாசத்திரம் போலீசாரும் போய் பார்த்தனர். பள்ளி சுவற்றில் 'என் சாவுக்கு காரணம் ஜெ.பாபு' என்று எழுதப்பட்டிருந்தது. இளைஞர் கழுத்தில் நீளமான துணி தொங்கியது. பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்து போலீசார் கைப்பற்றினர். பொதுமக்கள் கூடிய பிறகு இறந்து கிடந்தது கல்லூரி மாணவன் சின்னமனை விஷ்ணு என்பது தெரிய வந்தது. இதனையடுத்து உறவினர்களும் கூடி கதறி அழுதனர்.
போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாபுவுடன் ஏற்பட்ட தகாத பழக்கத்தால் பாதிக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆசிரியரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கல்லூரி சென்ற மாணவன் பாடங்களில் சந்தேகம் கேட்க என்னிடம் பேசுவான் வேறு எந்த உறவும் இல்லை என்று கூறியுள்ளார். மாணவன் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ள நிலையில் மாணவன் இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதே பள்ளியில் கடந்த ஆண்டு சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தற்காலிக ஆசிரியை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இப்போதும் அதே சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் சடலம் இதே பள்ளி வளாகத்தில் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேதப் பரிசோதனை மற்றும் முழு விசாரணைக்கு பிறகே மாணவன் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்கின்றனர் காவல்துறை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/a5630-2025-10-24-20-14-39.jpg)