பாஜகவின் மூத்த நிர்வாகியும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. கடந்த 8 ஆம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் இருந்தபோது இல.கணேசன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடைய உடல் திநகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், திமுக சார்பில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அரசு மரியாதையுடன் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.