ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ அல்லது அதை நோக்கிய பயணமாக மட்டும் இல்லாமல், கொள்கை சார்ந்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் திமுக இளைஞரணியில் அடுத்தடுத்து நம்பிக்கையளிக்கும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. திமுக இளைஞரணிக்கு தலைநகர் சென்னையில் சொந்த கட்டிடமான அன்பகம் உள்ளது. பலமுறை தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தும், மற்ற மாவட்டங்களில் எங்குமே இளைஞரணிக்கு என சொந்தமான கட்டிடங்கள் இதுவரை இல்லை.
தற்போது ஈரோட்டில் இளைஞரணிக்கென சொந்த இடம் வந்துள்ளது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான கே.இ.பிரகாஷ் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி பிரதான சாலையில் 5 சென்ட் நிலத்தைத் தனது பெயரில் விலைக்கு வாங்கிய பிரகாஷ், அதை அப்படியே திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு பதிவு செய்து, அந்தப் பத்திரத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
இது பற்றி நம்மிடம் பேசிய எம்.பி. பிரகாஷ், “இது வெறும் நிலமாகவோ ஒரு சொத்தாகவோ இருக்கப் போவதில்லை. இந்த இடத்தில் அறிவுசார் இயக்கம் நடைபெறப் போகிறது. இரண்டு அடுக்கு கொண்ட கட்டிடம் கட்டுகிறோம். முதல் தளத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். அதில் முழுக்க முழுக்க சமூக விஞ்ஞான, இலக்கிய நூல்கள், மாணவர்கள் உயர்கல்வி பயிலப் போட்டித் தேர்வுக்கான நூல்கள் இருக்கும். மாணவ-மாணவியர் வந்து இங்கேயே படித்து, அவர்களது கல்விக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் இது செயல்படும்.
அடுத்து, இரண்டாவது மாடி முகப்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கலச் சிலை அமைக்கப்படும். இந்தச் சிலையை எங்களது மாவட்ட அமைச்சர் அண்ணன் முத்துச்சாமி தருகிறார். அந்தச் சிலையையொட்டி பெரிய அளவிலான அரங்கம் அமைக்கப்படுகிறது. அந்த அரங்கம் கட்சி மற்றும் இளைஞரணிக் கூட்டங்கள் நடத்துவது மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் வரலாறு, அது கடந்து வந்த பாதை, கொள்கை, லட்சியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு கற்றுத்தரும் பயிற்சிப் பட்டறையாகவும் விளங்கும். எதிர்கால இளைஞர்கள் தமிழகத்தின் தனித்துவங்களை, தமிழ் மொழியைக் காக்கும் போராட்டத்தில் திராவிட இயக்கத் தலைவர்களின் தியாகங்களை அறிந்து கொள்வதோடு, கொள்கை ரீதியாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இயக்கம் என்றென்றும் வலுவான அமைப்பாகத் தமிழ் மக்களோடு பயணிக்கும். அந்தப் பணியைத் தொடரவே இளைஞரணி அறக்கட்டளைக்கு வழங்கிய இந்த இடமும், அதில் உருவாகும் கட்டடமும் காலந்தோறும் தனது கடமையைச் செய்யும்,” என்றார்.
தற்போதைய மதிப்பில் அந்த இடமும் அதில் உருவாகும் கட்டடமும் ஏறக்குறைய இரண்டு கோடியைத் தாண்டும். அரசியலே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், கோடிகள் முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம் என இதுபோன்ற நல்ல செயலில் ஈடுபடும் உறுதிமிக்க இளைஞர் பட்டாளம் திமுகவில் இருப்பதால்தான், அரசியலமைப்பு பாதுகாப்பு, தேசியம், இடதுசாரி, திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு போட்டியாக எதிர்நிலையில் உள்ள பழமைவாத, மூட பழக்கவழக்கங்கள் கொண்ட பிற்போக்கு சித்தாந்தம் இதுவரை தமிழகத்தில் நுழையாமல் தடுக்கப்படுகிறது.