கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர், வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவரது அனுபவ பாத்திரத்தில் இருந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்துக்கு அருகே வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. இந்நிலையில், மணிவாசகம் இடத்தில் வெங்கடேஷ் மணல் அள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த ராணி குடும்பத்தினர், இதுப்பற்றி மணிவாசகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், மணிவாசகம் தனது தம்பி குட்டி என்கிற யோகேஸ்வரன் மற்றும் உறவினர் ஆனந்த் ஆகியோரோடு சேர்ந்து சென்று வெங்கடேஷிடம் தனது இடத்தில எப்படி மண் அள்ளலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 'எதுவாக இருந்தாலும் நாளை காலை இடத்தை அளக்கலாம். அதன்பிறகு எல்லையை பார்த்துக்கொள்ளலாம்' என்று மணிவாசகம் சொல்லியுள்ளார். ஆனால், வெங்கடேஷ் தரப்பினர் அரிவாளால் மணிவாசகம், யோகேஸ்வரன், ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் வெட்டியுள்ளனர். அவர்களோடு அங்கு நின்ற ராணி மற்றும் அவரது தாய் ராசம்மாளையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. அதன்பிறகு, வெங்கடேஷ் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/15/k-2025-07-15-16-24-57.jpg)
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்த வாங்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த மூன்று பேரையும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மணிவாசகம் உயிரிழந்தார். அதேபோல், ஆபத்தான நிலையில் இருந்த குட்டி என்கிற யோகேஸ்வரன், ஆனந்த் ஆகியோரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ராணி மற்றும் அவரது தாய் ராசம்மாள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெங்கடேஷ் உள்ளிட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.