Lalu Prasad Yadav's son forms alliance with 5 parties to contest bihar assembly poll
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். ஒருபுறம், ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவுடன் இணைந்து நிற்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மறுபுறம், மாநில அரசின் மீதுள்ள அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகனும், ஹசன்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான தேஜ் பிரதாப் யாதவ், 5 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்த போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராக பதவி வகித்த தேஜ் பிரதாப் யாதவ், சில வருடங்களுக்கு முன்பு பீகாரின் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தி ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கடந்த மே மாதம் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கும், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுக்கும் இடையில் இருக்கும் நீண்ட கால உறவு குறித்து தேஜ் பிரதாப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், இருவரும் 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு வெளியான அடுத்த நாளிலேயே, 6 ஆண்டுகளுக்கு தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்தும், குடும்ப உறவுகளிலிருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக அறிவித்தார். இருப்பினும், தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார். இந்தாண்டு இறுதியில் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேஜ் பிரதாப் யாதவ் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து விலக்கியிருப்பது பீகார் மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஐந்து சிறு கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணியை தேஜ் பிரதாப் அமைப்பதாக அறிவித்துள்ளார். விகாஸ் வஞ்சித் இன்சான் கட்சி (விவிஐபி), போஜ்புரியா ஜன் மோர்ச்சா (பிஜேஎம்), பிரகதிஷீல் ஜனதா கட்சி (பிஜேபி), வாஜிப் அதிகார் கட்சி (டபிள்யூஏபி), மற்றும் சன்யுக்த் கிசான் விகாஸ் கட்சி (எஸ்கேவிபி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தேஜ் பிரதாப் அறிவித்துள்ளார். இது குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், “மக்கள் என்னை கேலி செய்ய சுதந்திரமாக இருக்கிறார்கள், ஆனால் நான் என் சொந்த பாதையில் செல்வேன். சமூக நீதி, சமூக உரிமைகள் மற்றும் பீகாரின் முழுமையான மாற்றத்தை உறுதி செய்வதற்காக எங்கள் கூட்டணி ஒன்றாக முன்னேறும். மஹுவா சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.