உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளில் கோடிக் கணக்கில் நிதி முறைகேடு நடந்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரும், ஐபிஎல் நிறுவனருமான லலித் மோடி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நேரத்தில் அவர் திடீரென்று இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.

Advertisment

அதே போல், பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். இருவரையும் இந்தியா கொண்டு வர இந்தியா பல முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில், விஜய் மல்லையாவின் 70வது பிறந்தநாள் விழா லண்டனின் பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் லலித் மோடி பங்கேற்று இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஜய் மல்லையாவுடன் அருகே இருந்து, ‘நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்’ என்று லலித் மோடி கூறும் போது விஜய் மல்லையா சிரித்தப்படியே நின்றார்.

இருவரும் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறிவர்கள் என்று லலித் மோடி கூறிய அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இருவரும் இந்தியாவை அவமானப்படுத்துவதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து, இருவரையும் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வருவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் இதற்காக பல அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Advertisment

இந்நிலையில், சர்ச்சையாக பேசியதற்காக லலித் மோடி தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தாலோ, குறிப்பாக நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்ற இந்திய அரசாங்கத்தை புண்படுத்தியிருந்தாலோ நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒருபோதும் அதை வெளிப்படுத்த விரும்பியதில்லை. மீண்டும் ஒருமுறை நான் பகிரங்கமான மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.