தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் அருகேயுள்ள குரங்கணி முத்து மாலையம்மன் கோவிலில் ஆனி பெருந்திருவிழா (கொடை விழா) கடந்த ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஜூலை 22 ஆம் தேதி எட்டாவது நாள் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி, கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) வைபவம், மகா தீபாராதனை, மற்றும் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து  ஜூலை 23 ஆம் தேதி வழக்கம்போல் நித்ய பூஜைகள் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தநாள்(ஜூலை 24) காலையில் கோவில் பூசாரி நடை திறந்து உள்ளே சென்றபோது, ஸ்ரீ நாராயண சுவாமி சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலும், ஸ்ரீ துர்கையம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலும் காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, கோவில் வளாகத்தைச் சுற்றி பார்த்தபோது, கோவிலின் பின்புறம் இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஏரல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைக்கப்பட்ட உண்டியல்களைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.  மேலும், விரல் ரேகை நிபுணர்களும், மோப்ப நாய் ஜியோவும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, தடயங்கள் கைப்பற்றப்பட்டன. கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, உண்டியல் திருட்டு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், "இந்த கோவிலில் 11 நிரந்தர உண்டியல்களும், இந்த ஆனி பெருந்திருவிழாவிற்காக 6 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி பெருந்திருவிழாவின்போது லட்சக்கணக்கான பணம் உண்டியல் காணிக்கையாக வரும். எட்டாவது நாள் கொடை விழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு உண்டியல் பணம் எண்ணப்படுவதற்கு முன்பாக இந்தக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேறியுள்ளது," என்று தெரிவித்தனர்.

கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில், இந்தத் தற்காலிக உண்டியல்கள் அனைத்தும் தனி அறையில் எடுத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை பின்பற்றப்படாததால், கொள்ளையர்கள் இதை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு லட்சக்கணக்கான பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

பிரசித்தி பெற்ற குரங்கணி முத்து மாலையம்மன் கோவிலில் கொள்ளைக் கும்பல் உண்டியல்களை உடைத்து, லட்சக்கணக்கான காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி