தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதிமுக, பா.ஜ.க தவிர மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகளில் இருகட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் அதிமுக - பா.ஜ.க இடையே அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த ஜூன் 27 ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த பேட்டியில் ‘தமிழகத்தில் ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்’ என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். அமித்ஷா கூறியதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா கூறவில்லை என்றுமழுப்பலாக பதில் அளித்தார்.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ள அமித்ஷா, ‘அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் என்டிஏ கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்’ எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமித் ஷா சொல்வதே வேத வாக்கு என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை மற்றும் தொழிலாளர் ஆகிய பதவிகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் 47 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், அமித் ஷா கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எல்.முருகன், “கூட்டணி விவகாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்த கேள்விகளை எல்லாம் முதல்வர் ஸ்டாலினிடமோ, திருமாவளவனிடமோ ஏன் கேட்க மாட்டிக்கிறீர்கள்?. கம்யூனிஸ்ட், திருமாவளவன் ஆகியோர் தினந்தோறும் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணி சுக்குநூறாக உடைய போகிறது. அந்த கூட்டணியில் இருந்து பல பேர் வெளியே போக போகிறார்கள். எங்கள் கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது. கூட்டணி விவகாரம் குறித்து அமித் ஷா இறுதி முடிவு எடுப்பார். இது குறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அமித் ஷா என்ன சொல்கிறாரோ அது தான் எங்களுடைய வேதவாக்கு” என்று கூறினார்.