சிக்கன் சமைத்து தரக் கேட்டதால் தனது சொந்த மகனையே பெண் ஒருவர் சப்பாத்திக் கட்டையால்  அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், பல்ஹார் மாவட்டம் தன்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லவி தும்டே (40). இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் சின்மய் கணேஷ் தும்டே என்ற மகனும் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பல்லவி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று சின்மய் கணேஷ் தும்டே, பல்லவியிடம் சிக்கன் சமைத்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பல்லவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

விடாப்பிடியாக சிக்கன் வேண்டும் என்று சின்மய் அடம்பிடித்ததால், பல்லவி ஆத்திரமடைந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பல்லவி, தனது சொந்த மகன் என்றும் பாராமல் சப்பாத்திக் கட்டையை எடுத்து சின்மய்யின் தலை மற்றும் உடலில் கொடூரமாக அடித்துள்ளார். இதில், சின்மயுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவனது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், பல்லவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. இதனால், சிறுவன் வீட்டிலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

சிறுவனின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர், வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சிறுவனின் உடல் தரையில் போடப்பட்டு ஒரு தாளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். இது குறித்து அவர்கள் விசாரித்த போது, தனது மகன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டதாக பல்லவி கூறியுள்ளார். இருப்பினும், இந்த சம்பவத்தில் சந்தேகமடைந்த அவர்கள், தாளைத் தூக்கிப் பார்த்துள்ளனர். அப்போது சிறுவனின் மார்பு, முதுகு மற்றும் முகத்தில் பல காயங்கள் இருப்பதைக் கண்டனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பல்லவியை உடனடியாக கைது செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

அந்த விசாரணையில், சின்மய்யின் 10 வயது சகோதரியையும் அதே சப்பாத்திக் கட்டையால் பல்லவி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக தஹானுவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு அவர் மாற்றப்பட்டார் என்பது தெரியவந்தது. பல்லவி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், இந்த சம்பவத்தில் மேலும் ஏதேனும் இருக்கலாம் என சில உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.