செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, “நம்முடைய முதல்வர் என்னை பார்த்து ஓய்வெடுங்கள் ஓய்வெடுங்கள் என்றார். அவர் ஓய்வெடுப்பதில்லை, நாங்கள் ஏன் ஓய்வெடுக்க வேண்டும்? நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ உங்களை பலப்படுத்த நாங்கள் உழைக்க வேண்டாமா? நீங்கள் ஒரு மின்சாரம், மின்மினி பூச்சிகளால் உங்களை ஒருபோதும் அசைக்க முடியாது. மின்மினி பூச்சிகளை நம்பிக்கொண்டு வடக்கே இருந்து வந்தவர்கள் சிலர், இந்த சந்தர்ப்பமாவது கிடைக்காதா என்று இங்கே ஆழம் பார்க்கலாம் நினைக்கிறார்கள். நீங்கள் ஆழம் பார்க்க நினைத்தால் உங்களை, பெரியார் மண் மூடிவிடும்.

Advertisment

வடக்கே இருந்து வருகிறவர்களுக்கு இந்த திராவிட இயக்கம் சார்பில் நாங்கள் சொல்லுகிறோம் மிரட்டி பார்க்காதீர்கள், அச்சுறுத்தி பார்க்காதீர்கள், ஆள்களை தேடி கூலிப்படைகளை எல்லாம் கொண்டுவந்து இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் தோற்கடித்து விட அழைக்காதீர்கள். இது கற்பாறை மீது கட்டப்பட்ட கருங்கோட்டை. இதை உங்களால் அசைக்க முடியாது.  நீங்கள் வெறும் மணல் மேடுகள், நீங்கள் சாதாரணமானவர்கள். வருணாசிரமத்தின் வாரிசுகள் இந்த ஆட்சி வரக்கூடாது நினைக்கிறார்கள். இந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்?. எங்களுக்கு மானத்தை தருகின்ற ஆட்சி, எங்களுக்கு அறிவை தருகின்ற ஆட்சி, எங்களுக்கு உரிமைகளை தருகின்ற ஆட்சி. அதற்காக நான் தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்லி சமரசம் செய்து கொள்ளாத ஒரு முதல்வர் இருக்கிறார் என்றால் இந்தியாவிலேயே திராவிட மாடல் முதல்வர்தான் என்ற பெருமையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு துணையாக இருப்பதுதான் எங்கள் வேலை. இனி ஆறு மாதத்திற்கு எங்களுக்கு எந்த வேலையும் கிடையாது” என்று பேசினார்.