Kunnam Ramachandran announces retirement from politics
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் நேற்று (21-01-26) திடீரென திமுகவில் இணைந்தார். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளரும் குன்னம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்தே விலகுவதாக கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எனது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவும், எனது உடல்நலத்தின் மருத்துவர் ஆலோசனையின் காரணமாகவும், திமுகவில் இணைவது என்ற முடிவில் இருந்து இன்று நாம் மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். இல்லத்தார்கள் ஆலோசனைகிணங்க மருத்துவர்களின் ஆலோசனைகிணங்க பொது வாழ்க்கையில் இருந்து விலகி கொள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம். இருப்பினும், என் உடல்நிலையை கருத்தில் கொண்டும், என் குடும்ப சூழ்நிலை, என் குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் குடும்ப நிம்மதிக்காகவும் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்க போவதில்லை. தயவுகூர்ந்து வைத்தியலிங்கமும் என்னோடு பயணித்த கழக தொண்டர்களும் என்னை மன்னிக்க வேண்டும். இதுவரை உறுதுணையாக இருந்த கழக தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சில விஷயங்களை பேசியபோது எங்கள் வீட்டில் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள், பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால், கூட்டம் எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு போகும் போது ஒட்டுமொத்த குடும்பமும் குழுமி இருந்தார்கள். எனது முடிவுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தது. இரண்டு விஷயங்கள் என் மனதை ரொம்ப வாட்டியது. என்னை பெற்றெடுத்த தாய், ஜெயலலிதா படத்தை வீட்டில் இருந்து அகற்றுவாயா? என்று கேட்டு அசிங்கமாக இருக்கிறது இதெல்லாம் வேலையா என்று கேட்டார். இதனால் நான் மிகுந்த வேந்தனை அடைந்து இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம் சொல்லிவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.
Follow Us