தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெருமாள்கோயில் தெரு சண்முகம் மகன் வசந்த் (19). இவர் கடந்த 23ஆம் தேதி இரவு சுவாமிமலை பகுதியில் நடந்த ஒரு விபத்தில் படுகாயமடைந்தார். அதன் பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் இளைஞர் வசந்த மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இதனையறிந்த மருத்துவக் குழுவினர் வசந்தின் தந்தை சண்முகம் உள்ளிட்ட உறவினர்களிடம் கூறி வசந்தின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் உயிருக்கு போராடும் பல உயிர்களை காப்பாற்றலாம் என்று கூறிய நிலையில் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். தன் மகன் உயிரைக் கொடுத்து 5 பேர் உயிரைக் காப்பாற்றுவான் என்பதால் வசந்தின் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர் வசந்தின் இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கண், சிறுகுடல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ஒரு சிறுநீரகம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கண் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கும் போலிசார் பாதுகாப்போடு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. வசந்தின் இருதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகாராஸ்டிராவைச் சேர்ந்த 34 வயது இளைஞருக்கு பொறுத்த கேட்கப்பட்டிருந்த நிலையில் தஞ்சையில் இருந்து ஆம்புலன்ஸ்சில் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறு திருச்சியில் இருந்து ஒரு ஹெலிக்காப்டரில் ஏற்றி சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு மிக வேகமாக மகாராஸ்டிரா இளைஞருக்கு பொறுத்தப்பட்டுள்ளது. வசந்த உடலில் இருந்து அகற்றப்பட்ட இருதயம் ஒன்றரை மணி நேரத்தில் சென்னையில் ஒரு இளைஞருக்கு பொறுத்தி உயிர் கொடுத்துள்ளனர். உடல் உறுப்புகள் தானம் செய்து பலர் உயிர் பிழைக்க காரணமான வசந்த் உடலுக்கு தஞ்சை மருத்துக்கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து உடலை அனுப்பி வைத்தனர்.
Follow Us