திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. கடலில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்து பின்னர் தமிழில் திருப்புகழ், கந்தர் அனுபூதி பாராயணம் பாடியபடி புனித நீர் கும்ப கலசம் யானை மீது ஊர்வலமாக கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து சண்முக விலாச மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை மாதம் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்க உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று காலையில் கடலில் இருந்து மேள தாளங்கள் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து கோவில் சண்முக விலாச மண்டபத்தில் 21 பசுக்கள் அழைத்து வரப்பட்டு கோ புஜை நடைபெற்றது. தொடர்ந்து புனித கலசங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. அதன்பின் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து புனித நீர் கும்ப கலசங்கள் எடுத்து வரப்பட்டு யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.இதில் ஓதுவார் மூர்த்திகள் தமிழில் திருப்புகழ், கந்தர் அனுபூதி உள்பட தமிழ் பாராயணங்களை பாடியபடி சென்றனர்.
செண்ட மேளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் மேற்கு ராஜ கோபுரத்திற்குக் கீழ் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுச் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், ஸ்தல அர்ச்சகர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி