Advertisment

குளித்தலை சிவராமன் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

kulithalai-sivaramaan-mks

திமுகவின் மூத்த நிர்வாகியும், தலைமை செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன் (வயது 83) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (28.08.2025) காலமானார். இவரது மறைவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திமுகவின் மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான குளித்தலை அ. சிவராமன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 

Advertisment

இளமைக்காலம் முதலே திமுகவின் மீது ஆர்வம் கொண்ட அ. சிவராமன் 1971 முதல் குளித்தலை நகரச் செயலாளராக 18 ஆண்டுகளும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தொண்டரணி அமைப்பாளராகவும் பணியாற்றினார். குளித்தலையில் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அன்றைய திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் அன்பிலார் தலைமையில், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் வெள்ளி விழா நடத்தி 60 பவுன் தங்க நாணயங்களை நகரச் செயலாளராக வழங்கிய தீவிர கலைஞர் பற்றாளர்தான் சிவராமன். கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார். 

Advertisment

மேலும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகவும், கரூர் மாவட்ட விவசாய அணிச் செயலாளராகவும், மாவட்டத் தி.மு.க. பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். திமுக அரசின் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக அரசு சார்பில் சிறந்த கூட்டுறவாளர் பட்டம் பெற்றுப் பாராட்டப்பட்டார். தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார். இவருடைய கட்சி பணி மற்றும் பொதுப்பணியின் காரணமாக 1989 சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினையும் பெற்றார். 

கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு குளித்தலை சிவராமன் நீண்டகாலமாகத் தடம் மாறாமல் பயணித்து வந்ததற்கான அங்கீகாரமாக, இந்த ஆண்டு கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில், 'பாவேந்தர் பாரதிதாசன்' விருது பெறத் தேர்வாகியிருந்தார். நேரில் கண்டு அவருக்கு விருதினை வழங்கி, அவர் கரம் பற்றிக் கொள்ள ஆவலுடன் நான் காத்திருந்த நிலையில், நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி சிவராமன் மறைந்துவிட்டார். அவரது வாழ்க்கையும் பணியும் இன்றைய திமுகவினர் அனைவரையும் வழிநடத்தும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

anna-arivalayam

முன்னதாக தி.மு.க.வின் முப்பெரும் விழா கரூரில் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கான விவரங்கள் வெளியாகியன. அதன்படி பாவேந்தர் விருது குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

dmk condolence karur Kulithalai mk stalin passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe