கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜாத்தி (வயது 65). கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை காவலர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ராஜாத்தி, திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள காசிகவுண்டன்புதூரில் அமைந்துள்ள சீட் என்ற முதியோர் காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து, காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ராஜாத்தியைப் பாதுகாப்புடன் மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ராஜாத்தி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற கவலையில் இருந்து வந்த குடும்பத்தினர், அவரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, ராஜாத்தியை மீட்ட தனிப்படைக் காவலர்களை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.