கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டை தடுப்பது குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் என்.வி. செந்தில் நாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே .எஸ் .அழகிரி, “இன்றைக்கு இந்தியாவில் அமைதியாக மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு அரசியல் கட்சிகளோ, பாராளுமன்றமோ மற்றும் மற்றவர்களோ காரணம் அல்ல. நமது அரசமைப்பு சட்டம் தான் இன்றைக்கு இந்தியாவை முழுமையாக வைத்திருப்பதற்கு காரணமாக திகழ்கிறது. இந்தியா கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இன மக்கள், பல்வேறு மொழி, மதங்கள் உள்ளிட்ட பெருமைகளை பெற்று பிரியாமல் இருக்க காரணம் நமது அரசமைப்பு சட்டம்.
இன்று வக்பு சட்ட திருத்தத்தின் மூலம், நரேந்திர மோடி தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வந்து வக்ஃப் வாரியத்தின் மீது திணித்து பரிசோதித்து பார்க்கிறார். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அற்புதமான இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதற்காக இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். கிருத்துவ மதம், புத்த மதம், சீக்கிய மதம், இந்து மதம் உள்ளிட்டவைகளுக்கு இந்த மோடி அரசாங்கம் சட்ட திருத்தத்தை கொண்டு வரவில்லை. இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் திருத்தம் செய்து இஸ்லாமியர்களையும் அவர்களின் கலாசாரத்தை சிதைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வக்ஃபூ சொந்தமான சொத்துக்களா? அல்லது அரசுக்கு சொந்தமான சொத்துக்களா? என்பதை ஒரு மாவட்ட ஆட்சியர் விசாரித்து முடிவு செய்ய வேண்டும். அப்படி முடிவு செய்யும் வரை அந்த சொத்து அரசு சொத்தாகும் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளதற்கு வரவேற்கிறோம். சொத்து யாருக்கு சொந்தம் என்பதை விசாரித்து அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாது. வக்ஃப் வாரிய சட்ட திருத்த இறுதி தீர்ப்பை வழங்கும் போது இன்னும் பல சாதகமான, நியாயமான விஷயங்களை உறுதியோடு வழங்க வேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையில் அனைத்து பக்தர்களும் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்பதோடு தமிழகத்தில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம். அதேபோல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம். மதசார்பின்மையை வலியுறுத்தும் விதமாக திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என கே.எஸ்.அழகிரி கூறினார். இதில் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் .என் .ராதா, சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன், எஸ் டி பி ஐ கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் பக்ருதீன், லாக்கான் பள்ளிவாசல் தலைவர் முகமது அலி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத் குமார் ,வட்டார தலைவர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.