திருமாவளவன் தென்னிந்திய அளவில் தேசியத் தலைவராக உருவாகியுள்ளார். அவரைத் தவறாக விமர்சிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் உள்ள மோடி அரசு தலைகுப்புற விழுந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை மிகக் குறைந்த விலையில் வாங்கிக்கொண்டிருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியவுடன், ஏறக்குறைய 14 சதவீதம் வாங்குவதை நிறுத்தியுள்ளது. இந்த உண்மையை இந்திய அரசாங்கம் சொல்லவில்லை. ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த உண்மையைச் சொல்கின்றன. இது இந்தியாவிற்கு பெரிய இழப்பாகும். நாம் எங்கே எண்ணெய் வாங்க வேண்டும் என்று சொல்வதற்கு அமெரிக்கர்கள் யார்? இதற்கு எப்படி தலைவணங்கலாம்? இதன் விளைவாக இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரிக்கும்.
மற்றொரு விஷயம், தமிழக பாஜகவில் பல பிரிவுகள் உள்ளன. சமீபகாலமாக திருமாவளவனுக்கு எதிராகப் பேசுவது என்று ஒரு பிரிவு உருவாகியுள்ளது. ஒரு தேசியக் கட்சி ஒரு பிரச்சனையை ஒருமுறை பேசினால், அதோடு முடித்துக்கொள்ள வேண்டும். ஆனால், தினமும் அவருக்கு எதிராகப் பேசுகிறார்கள். தொடர்ந்து இந்தப் பிரச்சனையை பாஜக முன்னாள் தலைவர்கள் பேசுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறந்துவிட்டு, திருமாவளவன் வன்முறையைத் தூண்டுவதாகப் பிரச்சனையைக் கொண்டு செல்கிறார்கள். இந்தப் பிரச்சனையை பாஜக கையாளத் தொடங்கியுள்ளது.
திருமாவளவன் கார் மோதியதாகக் கூறப்பட்ட வீடியோவை முழுமையாகப் பார்த்தேன். அவருடைய கார் இருசக்கர வாகனத்தில் இடிக்கவில்லை. ஆனால், மிக அருகாமையில் வந்து நிற்கிறது. அதில், பின்னால் வந்த காரில் தலைவர் வந்திருப்பதைத் தெரியாமல், யாரோ முறைத்திருக்கலாம். திருமாவளவனுடன் வந்த சிறுத்தைத் தோழர்கள் கொஞ்சம் எல்லை மீறி நடந்துகொண்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது அவர்களின் ஆர்வமிகுதியால் நடந்துள்ளது. கலைஞருக்கே இதுபோன்ற சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன.
கலைஞர் பேசும்போது திருமாவளவனின் பெயரைக் குறிப்பிடும்போது, அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். தங்கள் தலைவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்ற ஆர்வத்தில் ஆரவாரம் செய்வார்கள். அந்த ஆர்வத்தில்தான் இருசக்கர வாகனத்தில் வந்தவரைத் தாக்கியுள்ளனர். திருமாவளவன் ஒரு நாகரிகமான, கொள்கை வகையில் உறுதியான, பண்பாடு மிக்க அரசியல் தலைவர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக இதுவரை பிழையாமல், மதச்சார்பின்மைக் கொள்கையில் மிக உறுதியாக இருப்பவர். சிறிய விஷயத்தை வைத்து அவரை பாஜக நசுக்க முயற்சிக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் தேர்தலில் நின்றவர் திருமாவளவன். ஆரம்பக் காலத்தில், திருமாவளவன் போட்டியிட்டால் கலவரம் வரும் என்று எதிர்தரப்பினர் கூறினர். ஆனால், அவர் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு சாதிக் கலவரம் ஏற்படவில்லை. இந்தியாவில் மதச்சார்பின்மையை எப்படிக் கொண்டுவர வேண்டும் என்று முழங்குகிறோமோ, அதேபோல சாதிச் சார்பின்மையை இந்த மாவட்டத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில், கொண்டு வந்தவர்களில் ஒருவர் திருமாவளவன், மற்றொருவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இருவரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.திருமாவளவன் தென்னிந்திய அளவில் தேசியத் தலைவராக உருவாகியுள்ளார். அவரைத் தவறாக விமர்சிக்கக் கூடாது. இந்தப் பிரச்சனையைப் பெரிதுபடுத்தும் பாஜகவைக் கண்டிக்கிறோம்,” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் என்.வி.செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.