இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நடைபெற்று வரும் ஜென் Z (Gen Z) போராட்டம் நாட்டையே திக்குமுக்காட வைத்திருக்கிறது. அண்மையில் நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி தலைமையிலான நேபாள அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. மேலும், அந்த உத்தரவில் சமூக வலைதள நிறுவனங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணித்து, தேவையற்ற உள்ளடக்கங்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்காக சமூக வலைதள நிறுவனங்களுக்கு நேபாள அரசு 7 நாள் கெடு விதித்தது.
ஆனால், இந்த விதிமுறைகளின்படி வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப், லிங்க்ட்இன் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் பதிவு செய்யப்படவில்லை. இதனால், அரசின் உத்தரவின்படி 7 நாள் கெடு முடிந்து, செப்டம்பர் 4 ஆம் தேதி நள்ளிரவு முதல் பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. அதே சமயம், டிக்டாக்(சீன செயலி), டெலிகிராம் உள்ளிட்டவை நேபாள சட்டத் திருத்தத்தின்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அந்த செயலிகள் வழக்கம்போல் இயங்கின.
இதனிடையே, நேபாள மக்களின் பிரதான சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டதால், இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து, பெருமளவில் இளைஞர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மற்றவர்களை டிக்டாக் மற்றும் டெலிகிராம் செயலி மூலம் ஒருங்கிணைத்து, போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கிய போராட்டம், பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. நடிகர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும், பேச்சுரிமை பறிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டமானது, அந்நாட்டுத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நிலைகுலைய செய்தது. காவல்துறையின் பாதுகாப்புகளை மீறி, சிலர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, முன்னாள் பிரதமரின் வீடு, பொகாராவில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம் உள்ளிட்டவை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், உள்துறை அமைச்சர் ரமேஷ் லெக்ஹக் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
நிலைமை கையை மீறி செல்வதை உணர்ந்த பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி, அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கி அரசு உத்தரவிட்டது. இருப்பினும், போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஊழலை மறைக்கவும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கவும் நினைக்கும் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நாட்டில் நிலவும் அசாதரண நிலையை கருத்தில் கொண்டு, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுப்பு படையினர் குவிக்கப்பட்டு இருக்கின்ற்னர். சில இடங்களில் ஒன்றுக்கூடிய போராட்டக்காரர்கள் பாடுகாப்பு வீரர்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
இதனிடையே தனது அனைத்து பொறுப்புகளையும் துணைப் பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு, உடல்நலக் காரணங்களால் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி வெளிநாடு செல்லவுள்ளதாகத் தகவலும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நோபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.