தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று (05.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக, 2026ல் திமுக - தவெக இடையே தான் போட்டி என்று கூறினார். விஜய் பேசிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளிஹள்ளி பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த தேர்தல்கள் முழுவதுமே நேரடியான மோதல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலம் போட்டியில் இருந்த இரண்டு கட்சிகளிலும் செல்வாக்கு உள்ள தலைவர்கள் மறைந்துவிட்டார்கள். ஒருபக்கம் திமுகவில் கலைஞரும், மறு பக்கம்  அதிமுகவில் ஜெயலலிதாவும் மறைந்துவிட்டார்கள்.

இந்த சூழலில் தான், இந்த தேர்தலை நாம் சந்திக்கிறோம். இந்த சூழலில் புதிய புதிய கட்சிகளும் உருவாகியிருக்கின்றன. வெளியே மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு இல்லை, ஆனால், ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர். ஏதோ சினிமாவில் நடித்தார்கள். சினிமாவில் நடித்துவிட்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கிவிட்டதை போல, தன்னை முழுமைபடுத்திக் கொண்டு அவர்களும் தேர்தல் களத்தில் வருகிறார்கள். இந்த சூழலில் தான் நாம் தேர்தலை சந்திக்கிறோம். இதில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும். ஏனென்றால் மற்ற தேர்தலைப் போல் இந்த தேர்தல் இல்லை” என்று கூறினார். 

Advertisment