சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு சாத்தான்குளம் போலீசாரால் சித்தரவதை செய்யப்பட்டு பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வந்த ஜெயக்குமார் 2020 மே 18ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக  மே 22,  23 தேதிகளில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.  ரகு கணேஷ் ஆகியோர்  ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் சிலருடன் சேர்ந்து பேய்குளத்தை சேர்ந்த துரை என்பவரை தேடி அவரது வீட்டுக்கு சென்று  விசாரித்தனர்.

அப்போது அங்கு அவர் இல்லாததால்  அந்த போலீஸ் டீம் திருநெல்வேலி மாவட்டம் பாப்பான்குளத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த துரையின் தம்பி 28 வயதான மகேந்திரனையும்,  நாங்குநேரிக்கு சென்று அவரது மாமா தங்கவேல் என்பவரையும் மே 23ஆம் தேதி நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கி  கடுமையாக துன்புறுத்தியுள்ளனர்.  2 நாள்கள் சட்ட விரோத காவலில் வைத்து பின்னர் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மே 24ஆம் தேதி இரவு அவர்களை போலீசார் விடுவித்துள்ளனர். சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மகேந்திரன்  சுய நினைவு இழந்து உடல்நிலை சரியில்லாமல் மோசமானதை தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜூன் 13ஆம் தேதி  இறந்தார். இவரது சந்தேகம் மரணம் குறித்து அவரது தாயார் வடிவு, தூத்துக்குடி எஸ்.பி. முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும், தனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து  அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி நடைபெற்றது.

தற்போது இது குறித்த வழக்கு விசாரணை கோவில்பட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு டிஎஸ்பிகள் மாற்றப்பட்டு தற்போது மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி அருணாச்சலம் தலைமையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த இறுதி அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீசார் மற்றும் தன்னார்வலர் காவலர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை தவிர்த்து விட்டு, அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. ரகு கணேஷ்  ஆகியோரை மட்டும் சேர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மகேந்திரனின் தாயார் வடிவு ஆட்சேபனை தெரிவித்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த முறையீடு குறித்து பரிசீலனை செய்த கோவில்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் ஜூலை 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதில்... இவ்வழக்கின் இறுதியறிக்கையில் மேற்படி மகேந்திரனின் இறப்பு குறித்து போதுமான விபரங்கள் புலன் விசாரணை அதிகாரியால் குறிப்பிடப்படவில்லை. மேலும், இறுதியறிக்கையை பார்வையிடும் போது,  மகேந்திரனின் இறப்பு குறித்து புலன் விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை என்பது வெளிப்படுகிறது. இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி மகேந்திரனின் இறப்பு குறித்து முறையாக விசாரித்து இறுதியறிக்கை தாக்கல் செய்யவில்லை. பெயர் தெரியாத எதிரிகளை நீக்கியது குறித்து புகார்தாரர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். நீக்கப்பட்ட எதிரிகள் குறித்து புலன் விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவேண்டிய அவசியம் உள்ளது. சாட்சிகளின் விசாரணையின் அடிப்படையில் வழக்கில் பெயர் தெரியாத எதிரிகளை நீக்கி புலன் விசாரணை அதிகாரி தாக்கல் செய்த இறுதியறிக்கையை ஏற்பதற்கு போதுமான முகாந்திரம் இல்லை.  மகேந்திரனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அதுகுறித்து முறையாக புலன்விசாரணை செய்யாமல் பெயர் தெரியாத எதிரிகளை நீக்கிய புலன்விசாரணை அதிகாரியின் இறுதியறிக்கையை ஏற்க முடியாது.  மகேந்திரனுக்கு இறப்பு ஏற்பட்டது குறித்து முறையாக புலன் விசாரணை செய்ய வேண்டியது புலன் விசாரணை அதிகாரியின் கடமையாகும். எனவே சிபிசிஐடி தெற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த இறுதியறிக்கையை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர், வேறொரு காவல் துணை கண்காணிப்பாளரை நியமித்து அவர் மூலம் இவ்வழக்கை மேல் விசாரணை (Further Investigation) செய்து இறுதியறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து வக்கீல் ஜெயச்சந்திரன்  நம்மிடம் கூறும் போது,  சாத்தான்குளம் தந்தை -  மகன் கொலை சம்பவத்துக்கு முன்பாக நடந்த இந்த சம்பவத்தில் மாவட்ட காவல்துறை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவருமே சாத்தான்குளம் போலீஸால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்திருக்க மாட்டார்கள் என்பதை இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். உயிரிழந்த மகேந்திரன் குடும்பம் மிகவும் நலிந்த ஏழ்மை நிலையில் உள்ள குடும்பம். பலமான சமூக பின்புலம் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் இந்தப் புகாரை அலட்சியமாக பார்த்துள்ளனர்.  சிபிசிஐடி விசாரணையில் கூட டிஎஸ்பி அணில் குமார் மாறுதல் ஆகி சென்ற பிறகு அந்த விசாரணையின் போக்கே மாறிவிட்டது. சிபிசிஐடி சார்ஜ் சீட்டில் ஏ 1 எஸ்.ஐ. ரகு கணேஷ், ஏ 2 இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என இரண்டு பேருடன் சார்ஜ்  சீட்டை முடித்து விட்டார்கள். இது குற்றம் இழைத்த போலீசுக்கு சாதகமாக இருந்ததால் இதற்கு நாம் ஆட்சேபனை தெரிவித்து வாதத்தை முன் வைத்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சிபிசிஐடி தாக்கல் செய்த சார்ஜ் ஷீட்டை ரத்து செய்து ஜூலை 16ஆம் தேதி  உத்தரவிட்டுள்ளது. வரும் 29 ஆம் தேதி இவ்வழக்கில் வாய்தா வருகிறது.  எனவே நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  உத்தரவுபடி இந்த வழக்கில் நேர்மையான சிபிசிஐடி டி.எஸ்.பி. ஐ நியமித்து இந்த வழக்கை துரிதமாக விசாரணை செய்து  தொடர்புடைய அனைவரையும் வழக்கில் முழுமையாக சேர்த்து போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த மகேந்திரன் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மகேந்திரனின் தாய் வடிவு கூறுகையில், “என் மகன் மகேந்திரன் எந்த வழக்கிலும் சிக்காதவர்.  என் மூத்த மகன் துரையை தேடிவந்த அந்த போலீஸ்காரங்க  அவன் வீட்டில் இல்லாததால், என் தங்கை வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த இளைய மகன் மகேந்திரனை விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்க. அங்கு என் மகனை போலீஸ்காரங்க அடித்து சித்ரவதை செய்திருக்காங்க. அவன் வீட்டுக்கு வரும்போதே காயங்களுடன் தான் வந்தான். உடல்நிலை ரொம்ப மோசமானதால் தூத்துக்குடி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். சிகிச்சையில் இருக்கும் போதே  இறந்துட்டான். இன்னைக்கு என் குடும்ப ரொம்ப வறுமையில் இருக்குது.  நான் நிற்கதியா நிக்கிறேன். என் மகனை சித்திரவதை செய்த போலீஸ்காரங்க தப்பிக்க கூடாது.  நீதிமன்றம் மூலம் என் மகனின் சாவுக்கு நீதி கிடைக்கனும். அதைத்தான் அந்த ஆண்டவனிடம் வேண்டுகிறேன்” என்றார்.