கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது சாம் ஜார்ஜ். இவரது மனைவி 49 வயது ஜெஸி சாம். இந்தத் தம்பதியினருக்கு 28 வயது லிசா என்ற மகளும், 25 மற்றும் 23 வயது இரண்டு மகன்களும் உள்ளனர். பிள்ளைகள் மூன்று பேறும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். கேரளாவில் சாம் ஜார்ஜும், ஜெஸியும் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். முன்னதாக பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த சாம் ஜார்ஜ் பின்னர், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா (Travel and Tourism Management) தொடர்பாகப் படித்து வந்தார்.
இதனிடையே, சாம் ஜார்ஜுக்கு வெளிநாடு மற்றும் கேரளாவில் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் சில பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்து மனைவியின் கண்முன்னே தனிமையில் இருந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சாம் ஜார்ஜுக்கும் அவரது மனைவி ஜெஸிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இதன் காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும், 15 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து வந்தார்களாம். இந்த நிலையில் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து மகள் லிசா போன் செய்யும் போது, உடனே அழைப்பை எடுக்கும் தாய் ஜெஸி 27ஆம் தேதி நீண்ட நேரம் போன் செய்தும் அழைப்பை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த மகள் லிசா கோட்டயம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் கணவன்-மனைவி இருவருமே இல்லை.
இதனைத் தொடர்ந்து காணமல் போனதாகப் புகார் பதிவு செய்யப்பட்டு, சாம் ஜார்ஜ் மற்றும் ஜெஸி இருவரையும் கோட்டயம் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி அன்று இடுக்கி மாவட்டம் செப்புக்குளம் அருகே உள்ள 50 அடி பள்ளத்தாக்கில் ஜெஸியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அரைநிர்வாண கோலத்தில் இருந்த ஜெஸியின் உடலில் பல காயங்களும், யாரோ கழுத்தை நெரித்து கொன்ற தடயங்களும் இருந்தன. இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதேசமயம் காணாமல் போன சாம் ஜார்ஜை போலீசார் தேடி வந்த நிலையில், திடீரென அவரது செல்போன் சிக்னல் மைசூரில் இருந்தது தெரியவந்துள்ளது
இதையடுத்து மைசூருக்கு விரைந்த தனிப்படை, அங்கு பதுங்கியிருந்த சாம் ஜார்ஜை அழைத்து வந்து கோட்டயம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சாம் ஜார்ஜ் பல திடுக்கிடும் உண்மைகளைத் தெரிவித்திருக்கிறார்.
அதில், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 32 வயது மரியம் ஷிரின் என்ற பெண்ணுடன் சாம் ஜார்ஜுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரமும் மனைவி ஜெஸிக்குத் தெரிவந்துள்ளது. அத்துடன் சாம் ஜார்ஜுக்கு இருந்த வேறு சில பெண்களுடனான தொடர்பு குறித்து 26ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெப்பர் ஸ்ப்ரேவை ஜெஸியின் முகத்தில் அடித்து, அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக சாம் ஜார்ஜ் கொலை செய்திருக்கிறார். பின்னர் மறுநாள் ஈரான் காதலி மரியம் ஷிரினின் உதவியுடன் ஜெஸியின் உடலை காரின் டிக்கியில் ஏற்றி செப்புக்குளம் பள்ளத்தாக்கில் வீசியுள்ளார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, சாம் ஜார்ஜை கைது செய்த போலீசார், வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக வந்த காதலி மரியம் ஷிரினை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.பல பெண்களுடன் தொடர்புகளைத் தட்டிகேட்ட மனைவியை காதலியுடன் சேர்ந்து கணவரே கொலை செய்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.