டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணியிட மாற்றம் செய்யபட்டார். இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த ரகசிய அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது, பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரிய தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மக்களவை எம்.பிக்கள் 145 பேரும், மாநிலங்களவை எம்.பிக்கள் 63 பேரும் கையெழுத்திட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே,, தனது இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட உள்ள குழுவின் கண்டுபிடிப்புகளை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கு கடந்த 23ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று கூறி தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் இந்த வழக்கில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை முதலில் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்குவது கூட்டு அழைப்பாக இருக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதித்துறையில் ஊழல் மற்றும் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை அரசாங்கம் மட்டும் நீக்க முடியாது. அதை முழு நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். இந்த விஷயத்தில் நாம் பிரிந்து இருக்கக் கூடாது. நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைக்கு தேவையான எம்.பி.க்களின் கையொப்பங்கள் சேகரிப்பு) நடந்து வருகிறது. ஏற்கனவே 100 ஐத் தாண்டிவிட்டது” என்று கூறினார்.