மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி சீன ஊடுருவல் குறித்தும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். அந்த விவாதத்தை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

இந்த சூழ்நிலையில், கடந்த 4ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடி இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பிரதமரை சபைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுகொண்டதாக தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார். இதனால், மக்களவையில் பிரதமர் உரையின்றி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

பிரதமர் மோடி ஏன் பதிலுரையாற்றவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியபோது, ஜோதிமணி, சுதா உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து அவரை தாக்க சதி செய்ததால் அவரை அவைக்கு வரவேண்டாம் என தான் கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை நிராகரித்த எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால் தான் அவர் உரை ரத்து செய்யப்பட்டதாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை போடுவதாகக் கூறி சபாநாயகர் ஓம் பிர்லா மீது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் அளித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பதாகைகளுடன் போராடி பிரதமர் இருக்கையை சூழ்ந்த வீடியோ காட்சியை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.பிக்களின் மிக இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது என்றும் அனைத்து பாஜக எம்.பிக்களும் காங்கிரஸ் எம்.பிக்களை தடுத்து நிறுத்தாமல் அவர்களை எதிர்கொள்ள அனுமத்திருந்தால் அருவருத்தக்க சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கும் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் அவர், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisment