'Kilograms of jewelry stolen...' - Cooperative Bank manager arrested for feigning chest pain Photograph: (erode)
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி செயல்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் தணிக்கையில் 8.25 கிலோ தங்க நகை கையாடல் செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக விசாரணை தொடங்கியதும் வங்கி நகை மதிப்பீட்டாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஈரோடு ரங்கம்பாளையம், இரணியன் வீதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (45) தலைமறைவானார். துணைப்பதிவாளர் ஜெயந்தி புகாரின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தலைமறைவான ரமேஷ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் வங்கி மேலாளரான ஈரோடு, மூலப்பட்டறை, காந்தி நகரைச் சேர்ந்த கதிரவன் (55) தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சென்று போலீசார் அரசு மருத்துவர்களிடம் வங்கி மேலாளர் கதிரவன் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தனர். அப்போது கதிரவனுக்கு நெஞ்சுவலி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கதிரவன் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் கதிரவனை போலீசார் கைது செய்தனர். இந்த நகை கையாடலில் டிரைவர் செந்தில்குமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. ரமேஷ் குமார், கதிரவன் அடமானம் வைத்த மற்றும் விற்பனை செய்த இடங்களில் இருந்து 8.25 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த டிரைவர் செந்தில்குமாரும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வங்கி வாடிக்கையாளர்கள் கூறும்போது, 'தற்போது கைப்பற்றப்பட்ட நகை, வாடிக்கையாளர் வைத்த நகையா? என்பதை வாடிக்கையாளர் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டும். இதற்கு முன் பெரியார் வீதி கூட்டுறவு நகர வங்கியிலும் ரமேஷ் குமார் பணி செய்துள்ளார். அங்கும் இருப்பை உறுதி செய்து வாடிக்கையாளர் மற்றும் மக்கள் அறியும் வகையில் தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்துக் கடந்த இரண்டு நாட்களாக நகர வங்கிகளை அணுகியும் முறையான பதில் கிடைக்கவில்லை. இது குறித்தும் விசாரிக்க வேண்டும்' என்றனர்.
Follow Us