இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சக்தீஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் அருள்முருகன் அமர்வில் இன்று (25.08.2025) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரிக்கவும் அதன் உறுப்பினர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். 

Advertisment

மேலும் பள்ளிப்பாளையம் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான விதியின்படி முறையான அலுவலரான சுகாதார சேவைகளின் இயக்குநர் மட்டுமே விசாரித்து புகார் அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு விசாரணை குழு உறுப்பினர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி அரசு வழக்கறிஞர் அந்த பட்டியலை நீதிபதியிடம் வழங்கினார்.மேலும் இந்த பட்டியலில் உள்ள காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகிய மூவரும் சிபிசிடியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், “உடலுறுப்பு மாற்று சிகிச்சை என்பது உயிரை காப்பாற்றுவதற்காகத்தான். அதனை முறைப்படி செய்யவே அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் சட்ட விரோதமாக கிட்னி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மாநில அரசு முறையான அலுவலர் புகார் அளித்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய இயலும் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதோடு மாநில அரசு, இது குறித்து வழக்குப்பதிவு செய்ய தேவையில்லை. இந்த விசாரணை குழுவின் விசாரணையே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு அளித்துள்ள அலுவலர்களின் பட்டியல் நீதிமன்றத்திற்கு நம்பிக்கை அளிக்கவில்லை. எனவே பிரேமானந்த் சின்ஹா ஐ.ஜி. தலைமையில் நீலகிரி எஸ்.பி. நிஷா, நெல்லை எஸ்.பி. சிலம்பரசன், கோவை எஸ்.பி. கார்த்திகேயன், மதுரை எஸ்.பி. அரவிந்த் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில் செயல்படும். சட்டவிரோத மனித உடலுறுப்பு விற்பனை குறித்து தமிழக அளவில் இந்த குழுவானது விசாரணையை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டடு இந்த வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.