குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று முன தினம் (21-07-25) மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்தாலும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தன்கரின் ராஜினாமா குறித்து அரசாங்கமும் பாஜகவும் மௌனம் காத்து வருவதற்கு பின்னால் சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பினர்.
இதனிடையே, ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முறைப்படி ஏற்று, அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். பதவிக்காலம் முடியும் முன்பே மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த விவகாரம், கடந்த 21ஆம் தேதி மாலை முதல் நாடு முழுவதும் பற்றி எரிந்து வரும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று (23-07-25) தொடங்கியது. அப்போது ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஜக்தீப் தன்கரின் ராஜினாமா விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய பா.ஜ.க அரசு பதிலளிக்க வேண்டும் என மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளுமே ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் எப்போதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.கவை ஆதரித்துள்ளார். அவரது ராஜினாமாவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ன இருக்கிறது என்பது நாட்டிற்குத் தெரிய வேண்டும்” என்று கூறினார்.
கடந்தாண்டு நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் பாகுபாடற்ற முறையில் செயல்படுவதாகக் கூறி மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜக்தீப் தன்கர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.