தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சென்னை தியாகராய நகரில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (09.02.2026) நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதில், “தமிழகத்தில் இன்னும் 65 நாட்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. பேட்டி தருவது மட்டும் தான் கட்சியினுடைய பணியாக இருக்கக் கூடாது.
சீனியர் தலைவர்கள் தங்களை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்தந்த தொகுதியில் இருக்கும் நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும். சீனியர்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு சென்றால் அந்த பகுதியில் உள்ள நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும்” என கட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோல் தொகுதி பொறுப்பில் இருந்து விலகிய தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் குறித்து விவாதிக்க தடை விதிக்கப்படுகிறது எனவும் பி.எல்.சந்தோஷ் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/bjp-tn-meeting-2026-02-10-12-35-38.jpg)
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மாநில அளவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு எடுத்து வேலை செய்த கேசவ விநாயகன், இனிமேல் தமிழ்நாடு முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.இன் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக கேசவ விநாயகம் இருந்து வந்தார். பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம் என்ற நிலை இருந்தாலும், பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.யில் இருப்பவர்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி கூட குஜராத்தில் பாஜக அமைப்பு செயலாளர் ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/10/kesava-vinayagam-2026-02-10-12-35-02.jpg)