பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான தரவுகளை ஆதாரங்களோடு ராகுல் காந்தி கடந்த 7ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனக்குத் தெரியாமல் தனது முகவரியைப் பயன்படுத்தி 9 போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகப் பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் பூங்குன்னத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவர் கேபிடல் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பிளாட் எண் 4சி என்ற வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளரான இவர், தனது முகவரியைப் பயன்படுத்தி 9 போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனது குடும்பத்தில் 4 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பெரியவர்கள் தங்கள் மூதாதையர் கிராமமான பூச்சினிபாடத்தீல் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர். சரிபார்ப்புக்காக ஒருவர் என்னை அணுகியபோது தான் எனக்கு தெரியாமல் எனது முகவரியைப் பயன்படுத்தி 9 போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தேன். அவர்களில் யாரையும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் 4 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். எங்கள் அனுமதியின்றி எங்கள் முகவரியில் பெயர்களைச் சேர்ப்பது சரியல்ல’ என்று கூறினார்.
இதற்கிடையில், வாட்டர் லில்லி மற்றும் கேபிடல் வில்லேஜ் போன்ற பிற பூங்குன்னம் அடுக்குமாடி குடியிருப்புகளில் இதேபோன்று வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் காலியாக உள்ள பிளாட்கள் பிற மாவட்டங்களில் இருந்து வாக்குகளை மாற்ற போலி முகவரிகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்காளர் பதிவின் போது பெரிய அளவிலான தேர்தல் ஆணையம் அனுமதித்தாக சிபிஎம் தலைவரும் முன்னாள் திருச்சூர் வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமார் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 280 விண்ணப்பங்கள் ஒன்றாக வந்ததாகவும், மற்ற தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தனது முகவரியில் 9 போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெண் போலீசில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில் கேரளாவில் பா.ஜ.க வென்ற ஒரே மக்களவைத் தொகுதி திருச்சூர் ஆகும். இந்த தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.