மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான் தான் என்று கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் தான் தான் என்று உரிமை கோரியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், ‘டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், நான் ஜெயலலிதாவின் மகள் என தெரியவந்தது. சூழ்நிலை காரணமாக நான் ரகசியமாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று ஜெயலலிதாவை பார்ப்பேன்.

அம்மா கொல்லப்பட்டதில் இருந்து எனக்கு தூக்கம் வராது. 9 வருடம் ஆகிவிட்டது. அப்போது டெல்லியில் உள்ள ஒரு சாமிஜியை கண்டேன். அவர் தான் எனக்கு மோட்டிவேஷன் கொடுத்தார்கள். என் அம்மா முக்கிய மந்திரியாக இருந்தபோது கொல்லப்பட்டார். இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சாதாரண பெண்ணாக எனக்கு என்ன தெரியும்?. அப்போது அந்த சாமிஜி, உங்களுக்கு நீதி கிடைக்கும், நீங்கள் பிரதமர் மோடியை கண்டு முறையிட்டால் நியாயம் கிடைக்கும் என்றார். அதனால் மனு அளித்துள்ளேன். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.