கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயது முதியவர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த முதியவருக்கு கண்ணில் இரும்பு ராடு தாக்கியதில் படுகாயமடைந்தார். சக பணியாளர்கள் முதியவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு, குறித்த நேரத்தில் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அதன்பேரில் கோழிக்கோட்டில் இருந்து முதியவரை அழைத்துக்கொண்டு கோவையை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இதன் இடையே அவசர காலத்தில் உதவுவதற்காக தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உருவாக்கியுள்ள ‘எமெர்ஜென்சி எஸ்கார்ட்’ என்ற குழுவில் இத்தகவல் பகிரப்பட்டது. ஆம்புலன்ஸ் வாளையாறு வழியாக வரும் தகவலை அடுத்து, கோவையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களான சதீஷ், பிரபாத், மணி மற்றும் மதுரை வீரன், சந்தானம், பூபதிராஜா, சதா ஆகியோர் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் வாளையாறில் இருந்து அந்தக் கேரள ஆம்புலன்ஸுக்கு பக்கபலமாக உடன் சென்றனர்.
கேரள ஆம்புலன்ஸின் முன்புறம் 3 ஆம்புலன்ஸ்கள் சென்று, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. பின்புறம் ஒரு ஆம்புலன்ஸ் பாதுகாப்பிற்காக வந்தது. ஆம்புலன்ஸ் செல்லும் பகுதிகள் குறித்த விவரங்களை வாட்ஸ்அப் குழு மூலம் கண்காணித்து ஹக்கிம், இருதயராஜ் ஆகிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் மூலம் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் 185 கி.மீ. தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடந்து, அந்த முதியவர் குறித்த நேரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் கோவில்பாளையம் குமரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முக்கியஸ்தர்களுக்கு போலீசார் வழங்கும் பாதுகாப்பு எஸ்கார்ட் வாகனங்களைப் போல, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், கேரளாவில் இருந்து வந்த தொழிலாளிக்கு ஆம்புலன்ஸில் எஸ்கார்ட் வழங்கி உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரளாவில் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த முதியவரை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், குறித்த நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவி செய்த கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் சேவை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/15/01-2025-11-15-17-20-38.jpg)