Kerala occupied Tamil Nadu - We are Tamils who launched a protest Photograph: (ntk)
தமிழக எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து கேரள அரசு வைத்துள்ள அறிவிப்பு பலகைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தால் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரு தரப்பு போலீசாரும் குவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ளது தாலூர். இந்த பகுதி தமிழகத்திற்கு சொந்தமான பகுதி என்ற நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. கேரளா அரசு தமிழக பகுதியான தாலுர் பகுதியில் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக அறிவித்து அறிவிப்பு பலகை வைத்திருந்தது. மேலும் கேரள அரசு சார்பில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு முயற்சி நடைபெற்றது. அப்பொழுது நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து இரு மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த எல்லை விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை கேரளா அரசு துரிதப்படுத்தியது. அப்பொழுதும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று கேரளா அரசு தமிழகப் பகுதிக்குள் 'வெல்கம் டூ கேரளா' என்ற கேரளா எல்லை தொடங்குவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை மீண்டும் அதேபகுதியில் நாம் தமிழர் கட்சியினர் கேரள அரசின் அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழக மற்றும் கேரள காவல்துறையைச் சேர்ந்த இரு தரப்பு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியினரிடம் உடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us