கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்வதாகக் கூறி சத்தீஸ்கர் போலீசார் கைது செய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளான வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி ஆகியோரை கடந்த 26ஆம் தேதி நாராயண்பூரைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுடன் சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி கன்னியாஸ்திரிகள் மீது பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களின் தொடர் போராட்டத்தால், கன்னியாஸ்திரிகளான பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி ஆகிய இரண்டு பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம், 1968 ஆகியவற்றின் கீழ் ஆள் கடத்தல் மற்றும் மத மாற்றம் ஆகிய இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து சத்தீஸ்கர் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கன்னியாஸ்திரிகளுடன் இருந்த மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம், கேரள கிறிஸ்துவ சபை மத்தியிலும், கேரள மாநில அரசு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரிகளின் கைது நடவடிக்கையை எதிர்த்து கேரள கிறிஸ்துவ சபை, சிறுபான்மை அமைப்பு என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேரள ஆளுங்கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மூன்று பெண்களின் குடும்பத்தினர், அவர்கள் விரும்பித்தான் கன்னியாஸ்திரிகளுடன் சென்றதாகக் கூறினர். மேலும் அவர்கள், தாங்கள் விரும்பித்தான் கன்னியாஸ்திரிகளுடன் தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பியதாக நாராயண்பூர் காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘இந்த சம்பவம் சங்க பரிவாரின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. கேக்குகள் மற்றும் புன்னகையுடன் கிறிஸ்தவ வீடுகளுக்குள் நுழையும் அதே மக்கள் இப்போது கன்னியாஸ்திரிகளை வேட்டையாடுகிறார்கள். மத சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும், பிரிவினைவாத அரசியலை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சிதைப்பதற்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைக்கு பிறகு உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சிறுபான்மை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பின் உத்தரவாதங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த ஆபத்தான போக்கை நாம் எதிர்க்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார். இதனிடையே சம்பவம் குறித்து கேரளாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசையும், சத்தீஸ்கர் மாநில அரசையும் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (29-07-25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மதமாற்றம் மற்றும் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அனீஷ் துபே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த வழக்கு அதன் அதிகார வரம்பிற்கு வெளியே வருவதாகவும், இது தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வருவதாகவும் கூறி கன்னியாஸ்திரிகளின் மனுக்களை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு இப்போது பிலாஸ்பூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும். அதுவரை கன்னியாஸ்திரிகள் நீதிமன்றக் காவலில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், புகார்தாரரின் வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.