கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் ஆனந்து அஜி, சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) அமைப்பில் இருந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார். இதற்கிடையே, அவரது தந்தை உயிரிழந்த நிலையில், ஆனந்து அஜி தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்து அஜி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்து அஜியைத் தேடி வந்தனர். புகார் அளிக்கப்பட்ட அடுத்த நாள், அதாவது அக்டோபர் 9, அன்று, திருவனந்தபுரத்தின் தம்பானூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆனந்து அஜியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அறை முழுவதும் சோதனை செய்யப்பட்டு, தடயங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆனந்து அஜி உயிரிழந்த சில மணி நேரங்களில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியது. அந்தப் பதிவை அவர் உயிருடன் இருக்கும்போது தயாரித்து, தனது மரணத்திற்குப் பிறகு வெளியாகும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தார். அந்தப் பதிவில், "நான் 4 வயதாக இருக்கும்போது, என் தந்தை என்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்துவிட்டார். அன்று முதல், ஆர்.எஸ்.எஸ். முகாம்களுக்கு வருபவர்கள் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வந்தனர்.
இதனால் மனரீதியாக நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். எனது தாய் மற்றும் தங்கையை நினைத்து, இதுவரை எந்தத் தவறான முடிவையும் எடுக்காமல் இருந்தேன். ஆனால், இப்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னைப் போல மேலும் பலர் ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த அமைப்பிலிருந்து வெளியேறியதால் என்னால் இதைப் பகிர முடிகிறது. இந்தச் சம்பவத்திற்கு நீங்கள் என்னிடம் ஆதாரம் கேட்கலாம். ஆனால், என்னிடம் ஆதாரம் இல்லை. அதனால், எனது மரணத்தையே நீங்கள் ஆதாரமாகக் கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளானதாகக் கூறிய அவர், "ஆர்.எஸ்.எஸ். நபர்களுடன் நண்பர்களாக இருக்க வேண்டாம். நண்பர்கள் மட்டுமல்ல, உங்கள் தந்தை, சகோதரர் அல்லது மகன் கூட அதில் இருந்தால், அவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வையுங்கள்," என்று எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், "இன்ஸ்டாகிராம் பதிவு விசாரணையின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனந்து அஜியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால், அவரது குடும்பத்தினரிடம் இதற்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகம் குறித்து புகார் அளிக்கப்பட்டதா என்று விசாரித்து வருகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், உடனடியாக நீதி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, "இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்க வேண்டும். தனது தற்கொலைச் செய்தியில், ஆனந்து அஜி, ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தான் மட்டும் பாதிக்கப்பட்டவர் இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால், இது பயங்கரமானது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த முகாம்களில் கலந்து கொள்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், பெண்களைப் போலவே பரவலான ஒரு கொடிய பிரச்சினை," என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். முகாமில் நடந்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூர சம்பவம், கேரள மாநிலத்தைத் தாண்டி இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.