பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேரை சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் டேனிஷ் என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சுற்றுலாத் தளங்கள், இந்திய ராணுவ நகர்வுகள் குறித்து, பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு ஜோதி தகவல் பரிமாறி வந்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்காக கேரள அரசால் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கேரள மாநில அரசு பதிலளித்துள்ளது. அதில், கேரளா சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைக்காக பிரபலமான 41 யூடியூபர்களுக்கு கேரளா சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்திருந்தது. அதில், ஜோதி மல்ஹோத்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜோதி மல்ஹோத்ரா, கடந்த ஜனவரி 2024ஆம் ஆண்டு முதல் மே 2025 வரை கண்ணூர், கோழிக்கோடு, ஆலப்புழா, கொச்சி, மூணாறு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வீடியோக்கள் எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா உள்பட அனைத்து யூடியூபர்களின் பயணம், தங்குமிடம் ஆகியவற்றை கேரள சுற்றுலாத்துறையே ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறுகையில், “ஜோதி மல்ஹோத்ரா மீது எந்தவித வழக்கும் இல்லாத போது தான் சுற்றுலாத்துறையால் அழைக்கப்பட்டார். இன்ப்ளூயன்சர்ஸை தேர்ந்தெடுப்பதில் கேரள அரசுக்கு எந்த பங்கும் இல்லை. அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவும், நல்ல எண்ணத்துடனும் செய்யப்பட்டன. அரசாங்க அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை யாரும் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க முடியாது” என்று கூறினார்.