புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கக் கூடாது, மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உள்ளிட்ட அரசு தொழிற்சங்கங்கள் இன்று (09-07-25) வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனியார் பேருந்துகள், மின்சாரம், அஞ்சல் செயல்பாடுகள், வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய பொது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு நிறுவனங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி, இன்றைய வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக, கேரள அரசு கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ‘நோ வொர்க் நோ பே’ என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரள அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியே பேருந்தை இயக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பத்தனம்திட்டாவில் இருந்து கொல்லம் செல்லும் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் தாமஸ். வேலை நிறுத்த போராட்டத்தில் தாக்குதல் ஏற்படலாம் என்றும், அந்த தாக்குதலின் போது ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்க அவர் ஹெல்மெட் அணிந்தபடியே பேருந்தை ஓட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி கணேஷ் குமார் கூறுகையில், “வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால், இன்று கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளைத் தொடர்ந்து இயக்கும்” என்று தெரிவித்தார். இருப்பினும், அமைச்சரின் கூற்றை மறுத்த தொழிற்சங்கம், நாடு தழுவிய போராட்டத்தில் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.