கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளதாகக் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அந்த பட்ஜெட்டில், விபத்தில் சிக்கியவர்களுக்குக் கட்டணமில்லா ஆரம்ப கட்ட சிகிச்சை எனும் திட்டத்தை அறிவித்திருந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில், இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கருதப்பட்டது. அதனால், இந்த புதிய திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Advertisment

அந்த வகையில், மற்றொரு புதிய அறிவிப்பையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் கேரள முதல்வரின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவு குறித்து, அலுவலக குறிப்பில் வெளியாகியுள்ளது. அதில், கேரளாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கேரளீயன் என்ற குடியுரிமை அட்டை வழங்கப்படும். கேரளாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறாதவர்களுக்கும் இந்த அட்டை வழங்கப்படும். அவர்கள் அந்த நாட்டில் குடியுரிமை பெற்ற பின் இந்த அட்டை ரத்து செய்யப்படும்.

Advertisment

அரசு சேவைகள் மற்றும் பல்வேறு துறைகளில் தேவைகளுக்காகச் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுடன் கேரளீயன் அடையாள அட்டையையும் பயன்படுத்தும் வகையிலான புதிய சட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒற்றை குடியுரிமை முறை மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில், கேரளா அரசு தம் மாநில மக்களுக்கு மட்டும் தனியாக ஒரு குடியுரிமை அட்டை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.