Kerala Girls drop out of school and Hijab issue sparks controversy again
கேரளாவின் கொச்சி அருகே அருகே பள்ளுருத்தி பகுதியில் செயல்படும் ஒரு கத்தோலிக்க பள்ளியில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஒருவர், கடந்த வாரம் பள்ளி விதிகளை மீறி ஹிஜாப் அணிந்து வந்தார். இதனால், பள்ளி நிர்வாகம், சீருடை அணிந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி, மாணவியை கண்டித்து, பள்ளியில் நுழைய தடை விதித்தது. இந்த விவகாரம் பெரிதாகி, கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு, பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி, பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அனுமதி வழங்கியது. அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் அந்த பள்ளி இன்று திறக்கப்பட இருந்தது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்வதை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார். இது குறித்து கூறிய அவர், “ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி தனது கல்வியைத் தொடர உடனடியாக பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்த சம்பவத்தால் சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலை பள்ளி முதல்வரும், நிர்வாகமும் நிவர்த்தி செய்ய வேண்டும். கேரளா மதச்சார்பற்ற மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துகிறது. மத அடிப்படையில் மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ளாது. கேரளாவில் எந்த மாணவரும் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது. எந்தவொரு கல்வி நிறுவனமும் அரசியலமைப்பு உரிமைகளை மீற அனுமதிக்கப்படாது” எனத் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஹிஜாப் அணிய மறுக்கப்பட்டதால் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர்களின் தாயார், நிர்வாகம் மற்ற மதங்களை நோக்கி பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து சிறுமிகளின் தாயார் ஜெஸ்னா கூறுகையில், ‘நான் ஹிஜாப் அணிகிறேன். ஹிஜாப் அணிந்திருக்கும் ஒரு சிறுமியைப் பற்றிய அறிக்கை மற்றவர்களுக்கு பயத்தை உருவாக்கும் என்பது எனது நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்திற்கு அவமானம். அவர்கள் தங்கள் சொந்த மாணவர்களிடம் இவ்வாறு நடந்து கொண்டனர், ஏனெனில் அவர்கள் மற்ற மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மீது ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளிடையே இதுபோன்ற மனநிலையுடன் வளர்வது என் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, எனது குழந்தைகளை லேடிஸ் கான்வென்ட் பள்ளியில் சேர்த்துள்ளேன்.
அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ஒரு கன்னியாஸ்திரி எனக்கு போன் செய்தார். பள்ளி அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய ஒரு பார்வையைக் கொண்டுள்ளது என்றும், என் குழந்தைகளுக்கு அங்கு எந்த சிரமமும் இருக்காது என்றும், நான் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப முடியும் என்றும் அவர் எனக்கு உறுதியளித்தார். என் குழந்தைகள் அத்தகைய நல்ல குணமுள்ள ஆசிரியர்களுடன் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.