மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்றவர் வேடன் என்ற ஹிரண்தாஸ் முரளி சமீபகாலமாக ‘மீ டு’ சர்ச்சை, போதைப்பொருள் சர்ச்சை, அரசியல் கருத்து சர்ச்சை என தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டார். 2021ஆம் ஆண்டு ‘மீ டு’ விவகாரத்தில் இவர் மீது பாலியல் புகார் எழுந்தது. ஆனால் அப்போது எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் கொச்சியில் வீட்டில் ஆறு கிராம் கஞ்சா வைத்திருப்பதாக போலீஸ் வேடனை கைது செய்தது. பின்பு ஜாமீனில் வெளியானதும் சிறுத்தை- பல் அணிந்திருந்ததாக மற்றொரு வழக்கில் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்பு அது ஒரு ரசிகர் தனக்கு பரிசாக வழங்கியதாக கூறிய பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் வேடன் மீது மீண்டும் பாலியல் புகார் எழுந்தது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், வேடன் தன்னை 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் உறவு வைத்திருந்து பணமும் கடனாக பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். புகாரின் பேரில் கோழிக்கோடு, திருக்காக்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் வேடன் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே வேடன் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் உறவு முறிந்ததால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது எனக் கருத்து கேரள உயர்நீதிமன்றம், பாடகர் வேடனை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.