கடந்தாண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்தாண்டு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்த நிலையில், வயநாடு எம்.பி பிரியங்கா காந்தியை காணவில்லை என பா.ஜ.க போலீசில் புகார் அளித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க எஸ்டி மோர்ச்சா மாநிலத் தலைவர் முகுந்த பள்ளியாரா, வயநாடு மாவட்ட போலீசிடம் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘பிரியங்கா காந்தி கடந்த மூன்று மாதங்களாக மாவட்டத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற வயநாடு சூரல்மாலாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவின் போது அவர் காணாமல் போயுள்ளார். இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிலும் அவரை காணவில்லை. மாநிலத்திலேயே வயநாட்டில் தான் அதிக பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். ஆனால், பழங்குடி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் எம்.பியின் இருப்பு இல்லை. எனவே, இந்த புகாரை ஏற்று காணாமல் போன எம்.பியைக் கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அமைச்சரும், திருச்சூர் எம்.பியுமான சுரேஷ் கோபி தனது தொகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறி காங்கிரஸின் மாணவர் பிரிவான கேரள மாணவர் சங்கம் (கே.எஸ்.யு) திருச்சூர் கிழக்கு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கேஎஸ்யு மாவட்டத் தலைவர் கோகுல் குருவாயூர் அளித்த அந்த புகாரில், ‘கடந்த இரண்டு மாதங்களாக, திருச்சூரில் நடைபெறும் எந்த நிகழ்வுகளிலும் எம்.பி. முற்றிலும் காணவில்லை. மேயர் மற்றும் வருவாய் அமைச்சர் கூட அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுரேஷ் கோபியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் எங்கிருக்கிறார் என்றோ திரும்பிய தேதி குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.’ என்று குறிப்பிட்டிருந்தார். சுரேஷ் கோபி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்ததை அடுத்து பிரியங்கா காந்தி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.