KC Venugopal meets Chief Minister M.K. Stalin to discuss seat sharing
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட அமைத்து குழு அமைத்துள்ளது. அந்த வகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை திமுக இன்று (22-02-26) அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், தேமுதிக போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து 1 சீட்டை கூட்டணி கட்சிகள் தானம் செய்ய வேண்டும் என்று திமுக குழுவினர் கூறியதாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைவர் காதர் மொகீதின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று இரவு 8 மணியளவில் சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதல்வர் டிஎஸ் சிங் டியோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய குழுவில் இடம்பெற்றிருக்கும் டிஎஸ் சிங் டியோ பங்கேற்றுள்ளார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கே.சி.வேணுகோபால் வழங்கியதாகவும், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க சிரமம் உள்ளதாக முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.
Follow Us