ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் 2014-ம் ஆண்டு பிரிந்த பிறகு, முதல் பத்து ஆண்டுகளாக கே. சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்தது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையில் ஆட்சி செய்து வருகிறது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பிஆர்எஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் தீவிரமடைந்துள்ளன. கே. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி. ராமாராவ் மற்றும் மகள் கவிதா இடையே அதிகாரப் போட்டி நிலவியது. இது தொடர்பாக கட்சிக்குள் அவ்வப்போது கோஷ்டி மோதல்களும் ஏற்பட்டன.
இந்நிலையில், முந்தைய ஆட்சியில் கலேஷ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தெலுங்கானா அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கவிதா தனது உறவினர்களான முன்னாள் அமைச்சர் டி. ஹரீஷ் ராவ் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஜே. சந்தோஷ் ராவ் ஆகியோரை, இத்திட்டத்தில் ஊழல் செய்து தனது தந்தை கேசிஆரின் பெயரைக் கெடுத்ததாகக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பிஆர்எஸ் கட்சியிலிருந்து செப்டம்பர் 2, அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவிதாவின் ஆதரவாளர்கள் ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்து, இந்த இடைநீக்கத்தை "அநீதி" என்று கண்டித்தனர்.