கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (தந்தை பெயர் : சந்திரசேகர்) என்பவர் கடந்த 27.072025 அன்று திருநெல்வேலி மாநகரில் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக, இறந்த கவின் செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.396/2025 சட்டப் பிரிவுகள் 296(b), 49, 103(1) BNS உ/இ சட்ட பிரிவுகள் 3(1)(r) 3(1)(s) 3(2)(v) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில் இது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் (27.072025) கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று (30.07.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை (CBCID)க்கு மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.