தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தன் சகோதரியை காதலித்து வந்த மாற்று சமூக இளைஞரான கவினை கொலை செய்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த சம்பவத்தில் சுர்ஜித்தின் தந்தைக்கும் தொடர்பு இருக்கும், எனவே அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுர்ஜித்தின் தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார்.

Advertisment

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கவின் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் தொடர்ந்து விசாரணையானது  நடைபெற்று வருகிறது.

Advertisment

கடந்த 6 ஆம் தேதி  நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை இரண்டு நாட்கள் (13 ஆம் தேதி வரை) சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.