ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார். கடந்த 1931ஆம் ஆண்டு காஷ்மீரை ஆட்சி செய்துகொண்டிருந்த மகாராஹா ஹரி சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ஸ்ரீநகரின் மத்திய சிறைக்கு வெளியே டோக்ரா ராணுவத்தால் 22 காஷ்மீரிகள் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சியில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவாக ஸ்ரீநகரில் தியாகிகளில் கல்லறை அமைக்கப்பட்டது. அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13ஆம் தேதியன்று தியாகிகள் நினைவு தினமாக தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் அனுசரித்து வருகின்றன. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 2020ஆம் ஆண்டின் போது லெப்டினண்ட் கவர்னர் தலைமையிலான நிர்வாகம், அந்த நாளை தியாகிகள் தினமாக அனுசரிக்கக் கூடாது என விடுமுறை நாட்களில் இருந்து அந்த நாளை நீக்கியது. மேலும், தியாகிகள் கல்லறையில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி ஸ்ரீநகரில் தியாகிகள் நினைவு தினத்தை உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி அனுசரிக்கப்படுவதாக திட்டமிட்டிருந்தது. அதனை தடுக்கும் வகையில், கடந்த 13ஆம் தேதி உமர் அப்துல்லா உள்பட தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, நேற்று (14-07-25) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது அமைச்சர்களுடன் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது, கல்லறைக்குள் செல்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு, உமர் அப்துல்லா உள்பட அமைச்சர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அதனை மீறி கல்லறையின் சுவர் மீது உமர் அப்துல்லா உள்ளிட்ட அமைச்சர்கள் கல்லறைக்குள் சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். சுவர் மீது ஏறி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கல்லறைக்குள் சென்று அஞ்சலி செலுத்தியதால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உமர் அப்துல்லா தெரிவித்துள்ளதாவது, ‘ஜூலை 13, 1931 அன்று தியாகிகளின் கல்லறைகளில் எனது அஞ்சலியைச் செலுத்தினேன். தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் என்னை நவட்டா சௌக்கிலிருந்து நடந்து செல்ல கட்டாயப்படுத்த என் வழியைத் தடுக்க முயன்றது. நக்ஷ்பந்த் சப்ரிஸ்ட் சன்னதியின் வாயிலை அவர்கள் தடுத்து நிறுத்தி, சுவரில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் என்னை உடல் ரீதியாகப் பிடிக்க முயன்றனர், ஆனால் இன்று நான் இதனை நிறுத்தப்போவதில்லை. இது நான் அனுபவித்த உடல் ரீதியான போராட்டமாகும். நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. உண்மையில் இந்த சட்டத்தின் பாதுகாவலர்கள் எந்த சட்டத்தின் கீழ் நாங்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்க முயன்றார்கள் என்பதை விளக்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை எதிர்த்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment