Karur Tragedy - update Photograph: (police)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தேசிய தலைவர்கள் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருவதோடு சிகிச்சைப் பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் காயமடைந்து வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.