கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்பட்டனர். அவர்களை பேருந்துகள் நிறுத்தியுள்ள பகுதிக்கு அவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து கார்கள், மினி வேன்கள் மூலம் தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் அழைத்து செல்கின்றனர்.

Advertisment

கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் நாளை (அக். 27ம் தேதி) விஜய் சந்திக்கிறார். இதற்காக கரூரை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்பட்டனர்.

Advertisment

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து தவெக ஆறுதல் கூறாததை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை அடுத்து அக். 3, 4ம் தேதிகளில் உயிரிழந்தவர்களை குடும்பத்தினரை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். அக். 6, 7ம் தேதிகளில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து வீடியோ கால் மூலம் விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வைத்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்க அக். 13, அக். 17ம் தேதிகளில் விஜய் கரூர் வர திட்டமிட்ட நிலையில், நேரில் வர இயலாததால் அக். 18ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் பணம் வரவு வைக்கப்பட்டது.

Advertisment

கரூர் வந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்திக்க இயலாத நிலையில் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக நிர்வாகிகள், நேரிலும், போனிலும் சென்னை செல்ல விருப்பமா எனவும் எத்தனை பேர் வருகின்றனர் என்ற விபரங்களை கடந்த 2 நாட்களுக்கு முன் கேட்டறிந்தனர். இதையடுத்து நாளை (அக். 27ம் தேதி) சென்னை மகாபலிபுரத்தில் விஜய், அவர்களை சந்திக்கிறார். இதற்காக கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்காக 5 பேருந்துகள் வரை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரூரில் உள்ள 27 குடும்பங்களை சேர்ந்தவர்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்னை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் சில குடும்பத்தினர் உயிரிழந்தவர்களுக்கான 30ஆம் நாள் வழிபாடு செய்கின்றனர். இதனால் அவரவர் வசதிக்கேற்ப வருவதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொகுசு பேருந்துகளில் அழைத்து செல்வது சர்ச்சையாகும் என்பதால் பேருந்துகளை நகருக்கு வெளியில் இருந்து புறப்படும் வகையில் ரகசியமாக ஏற்பாடு செய்துவிட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களை கார் மற்றும் மினி வேன் மூலம் பேருந்து இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஏமூர்புதூர் பகுதியில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பகுதிக்கு இன்று (அக்.26ம் தேதி) காலை 9.30 மணிக்கு கார், மினி வேனுடன் வந்த தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை அவ்வாகனங்களில் அழைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இவற்றை புகைப்படம் எடுத்த செய்தியாளர்களிடம், படங்கள் எடுக்கவேண்டாம், இதனால் பிரச்சனை ஏற்படும், புறப்படுங்கள் என எச்சரித்ததை அடுத்து செய்தியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இவர்கள் கரூர் வெண்ணெய்மலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பேருந்துகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்துகள் நண்பகல் புறப்பட்டு இன்று இரவு சென்னை மகாபலிபுரம் விடுதிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.